அமராவதி: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள், தசரா பண்டிகையன்று ராவணன் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் அரிய நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது.
வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தசரா நிறைவு நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தசரா பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுகின்றனர். இவர்கள் ராமர், லட்சுமணன், சீதையை வழிபட்டாலும், பண்டிகையின் இறுதி நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது இல்லை. அதற்கு பதிலாக ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் அரங்கேறும் இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:ராவணனின் புத்திசாலித்தனம் மற்றும் ஆன்மிக பக்தி ஆகிய குணங்களுக்காக, அவரை வழிபடும் பாரம்பரியம் எங்கள் கிராமத்தில் 300 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ராவணனின் ஆசீர்வாதத்தால் எங்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருப்பதாகவும், மகிழ்ச்சியும், அமைதியும் நீடிப்பதாகவும் நம்புகிறோம். அதனால் தான் ராவணனின் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.