திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவில் நிறைவு நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விழா நடப்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடற்கரை கிராமம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளது முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் கோயில். கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் நவராத்திரி தசரா விழாவைப் போல தமிழகத்தின் தென்கோடியில் நடக்கும் விழாவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விழா நடக்கிறது. கடந்த 26ம் தேதி காலை தசரா விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிசேக, ஆராதனைகளுடன் இரவில் வீதி உலா நடந்தது.
சூரசம்ஹாரம் : 10ம் திருவிழாவான நேற்று காலையில் மகாஅபிஷேகம் நடந்தது. காப்பு கட்டி வேடமிட்டிருந்த பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கோயில் வளாகத்திற்குள் வரத்துவங்கினர். மாலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கடந்தரையில் கூடினர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 12:00 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு கிளம்பினார். சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அபிசேக ஆராதனை நடந்தது. இன்று காலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா வருகிறார். இன்று பக்தர்கள் காப்புகளை அவிழ்ந்து, வேடம் கலைந்து, விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
பாதுகாப்பு : 2 ஆண்டுகளுக்கு பிறகு லட்சக்கணக்கில் பக்தர்கள் திறளும் விழா என்பதால் மாவட்ட எஸ்.பி.,பாலாஜி சரவணன் தலைமையில் 6 ஏ.டி.எஸ்பிகள், 22 டிஎஸ்பிகள், 83 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்வுகளை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.