பரமக்குடி: பரமக்குடியில் நவராத்திரி விழாவில் அம்மன் மற்றும் தாயார் மகிஷாசுரனை வதம் செய்யும் விழா நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 9 நாட்களாக நவராத்திரி விழாவில் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் பல்வேறு அவதாரங்களில் அருள் பாலித்தனர். பத்தாவது நாளான நேற்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வீதி வலம் வந்தார். அப்போது பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றங்கரையில் சூரனை வதம் செய்யும் அம்பு விடுதல் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை குதிரை வாகனத்தில் வலம் வந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. எமனேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் அம்மன் வலம் வந்தார். இதேபோல் பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் நேற்று சூரசம்ஹார விழாவுடன் நவராத்திரி விழா நிறைவடைந்தது.