மயிலாடுதுறை: தேரிழந்தூர் ஆமருவிப்பன் கோவில் தெப்ப உற்சவம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஹேமம் புஜநாயகி தாயார் உடனாகிய ஆமருவியப்பன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். அதனை ஒட்டி நடைபெறும் தேசிகர் உற்சவத்தை முன்னிட்டு விஜயதசமிக்கு இரண்டாம் நாள் பெருமாள் தெப்ப உற்சவம், மூன்றாம் நாள் அடியார் தேசிகர் தெப்ப உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு தேசிகர் உற்சவத்தை முன்னிட்டு நேற்று கோவில் குளத்தில் பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று தேசிகர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த இரண்டு தெப்ப உற்சவத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனத்தை கோவில் பட்டாச்சாரியார் வாசன் தலைமையிலானோர் செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் செய்திருந்தார்.