காளஹஸ்தி சிவன் கோயில்களில் குவியும் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2022 07:10
சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஆனால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆன்மீக தலங்களான காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், (திருமலை திருப்பதி தேவஸ்தானம்) ஏழுமலையான் கோயில் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக தினம் தினம் அதிகரித்து வருகின்றனர். இதற்கு காரணம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக வருகின்றனர். ஆனால் அங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் சாமி தரிசனத்திற்கு சுமார் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் காத்திருக்கும் அச்சமயங்களில் ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் காணிப்பாக்கம் விநாயகரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் விரும்புகின்றனர் .சாதாரணமாக வார இறுதி நாட்களில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் குறிப்பாக வெள்ளி சனி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். தற்போது ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஏற்படுவதால் அங்கு வரும் பக்தர்கள் அதிகமானோர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் இங்கு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளி சனிக்கிழமைகளை விட இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகமான பக்தர்கள் வருவார்கள் என கோயில் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது .இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மிகப் பழமை வாய்ந்தது என்பதால் கோயிலின் மேல் கூரை இதுவரை பலமுறை பழுது பார்க்கப்பட்டாலும் மழை நீர் சொட்டுவது குறையாமல் உள்ளது.இதனால் பக்தர்கள் கவனக்குறைவாக இருந்தால் கால் சரிந்து விழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதற்காக கோயில் சார்பில் கோயிலின் மேல் கூரை சீர்படுத்துவதற்காக சென்னை ஐஐடி நிபுணர்களை வரவழைக்க திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.