ராமேஸ்வரம்-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தல வரலாறு வீடியோ காண ஆன்மிக மரபை மீறி தியேட்டர் போல் இருக்கைகள் அமைத்ததற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இக்கோயில் 11ம் நுாற்றாண்டில் உருவானது. இங்குள்ள 22 தீர்த்தங்களில் உலகம் முழுவதுமுள்ள ஹிந்துக்கள் நீராடி செல்கின்றனர். சுவாமி முன் சிறப்பு கட்டணத்தில் பக்தர்கள் அமர்ந்து தரிசித்தனர். இதனால் பக்தர்களிடம் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதால் துணை ஆணையர் மாரியப்பன் இதற்கு தடை விதித்து சுவாமியை நின்று தரிசிக்கும் வகையில் மாற்றியமைத்தார். கோயில் உருவானது முதல் பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வசதி இல்லை. இந்நிலையில் கோயில் 2ம் பிரகாரத்தில் கோயில் தல வரலாறு குறித்து வீடியோவில் பக்தர்கள் காண பெரிய டிஸ்பிளே நிறுவப்பட்டது. இதனை பக்தர்கள் நின்றும், சம்மணமிட்டும் அமர்ந்து ரசித்த நிலையில், ஆகம மரபை மீறி நேற்று முதல் சினிமா தியேட்டர் போல் இருக்கைகள் அமைத்துள்ளனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், கோயில் பேஸ்கார் அலுவலகத்தில் ஊழியர்கள் சம்மணமிட்டபடி சிறப்பு தரிசனத்திற்கு ரசீது வழங்கியும், உண்டியல் பணத்தை இருக்கை இன்றி ஊழியர்கள் சம்மணமிட்டு எண்ணுகின்றனர். ஆகம மரபு மீறி கோயிலுக்குள் இருக்கை அமைத்தது, மாநில அரசின் ஹிந்து விரோத போக்கை காட்டுகிறது. கோயிலுக்குள் பாரம்பரிய முறையை மாற்றாமல் பழமையான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.