ஐப்பசி பூஜை, மண்டலகால பூஜை சபரிமலை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2022 03:10
சபரிமலை: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை, மண்டல கால பூஜை நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.
ஐப்பசி மாத பூஜைகள் அக்., 18ல் தொடங்குகிறது. இதற்காக அக்., 17 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அக்., 18 முதல் 22 வரை ஐந்து நாட்கள் பூஜைகள் நடந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக அக்., 24 மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 25 இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின் 41 நாட்கள் நடக்கும் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்படுகிறது. நவ.,17 முதல் டிச., 27 வரை மண்டல கால பூஜைகள் நடந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இந்த நாட்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதுவரை போலீஸ் இணையதளத்தில் இருந்த இந்த முன்பதிவு கேரள ஐகோர்ட் உத்தரவின் படி நேற்று முதல் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கியது. மண்டல காலத்தில் தினமும் ஆறு சிலாட்களில் தலா 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுடன் நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் சன்னிதானம் வரலாம். இதனால் மண்டல காலத்தில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.