பதிவு செய்த நாள்
12
அக்
2022
08:10
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் அவதரித்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள குளக்கரையில் வேதாந்த தேசிகன் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகனின் அவதார தின விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும்.
இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருள்வது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு வேதாந்த தேசிகரின் 754வது அவதார தின விழாவுக்காக திருவள்ளூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, வீரராகவ பெருமாள் புறப்பட்டார். நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் எல்லையை வந்தடைந்தார். அங்கு வேதாந்த தேசிகர் ஊர் எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு வீரராகவ பெருமாளை அழைத்தார். அதன் பின், ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு கண்டருளி, காலை 6:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் அஹோபில மடத்திற்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் பொது தரிசனம் நடந்தது. காலை 9:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் மாட வீதிகளில் திருவாபரண திருமேனியுடன் வீரராகவ பெருமாள் வேதாந்த தேசிகன் கோவிலை வந்தடைந்தார். அங்கு மதியம், 1:00 மணிக்கு, வீரராகவ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:30 மணிக்கு வேத திவ்யபிரபந்தம், பஜனை கோஷ்டி நடைபெற்றன. நள்ளிரவு 12:00 மணிக்கு திருவீதி புறப்பாடும், திருவாய்மொழி சேவையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.