பதிவு செய்த நாள்
15
அக்
2022
02:10
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிலுக்கு வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலம், அரங்கநாதர் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். கோவில் முன்புள்ள தாசர்களுக்கு பக்தர்கள் படையலிட்டு, பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை விழா நடந்தது. அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கோவிலில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு, 4:45 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாத கடைசி வாரம் என்பதால், ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். முன்னதாக கோவில் முன்பு அமர்ந்துள்ள, நூற்றுக்கணக்கான தாசர்களுக்கு பக்தர்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வழிபட்டனர். பின்பு தாசர்கள் கொடுத்த சிறிதளவு அரிசி, பருப்பு, காய்கறிகளை பெற்றுச் சென்று, அதை பொங்கலில் போட்டு விரதம் முடித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.