அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில் புரட்டாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அன்னூரில் உள்ள 350 ஆண்டு பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு, திருமஞ்சனமும், 5:30 மணிக்கு அபிஷேக பூஜையும், 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. பெருமாள் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். காலை 10:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும், பக்தி நடனமும் நடந்தது. மதியம் 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னத்தூர் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேதர நாராயணமூர்த்திக்கு அபிஷேக பூஜை நடந்தது. மதியம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாராயணமூர்த்தி சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். ஞானானந்த குழுவின் பஜனை நடந்தது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையம் பெருமாள் கோவில் மற்றும் பொகலூர், பொங்கலூர், சாலையூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.