பதிவு செய்த நாள்
19
அக்
2022
03:10
காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் வெள்ளகுளம் பகுதியில், சந்தவெளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் ராஜகோபுரம் நுழைவாயில் முன் கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவு நீருடன், மழை நீரும் கலந்து தேங்கியுள்ளது. பல நாட்களாக தண்ணீர் தேங்குவதால், பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. கோவில் அருகில் கழிவு நீர் தேங்குவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சந்தவெளியம்மன் கோவில் அருகில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.