ஐப்பசி ‘தேய்பிறை சதுர்த்தசி’ நாளில் கொண்டாடப்படுவது தீபாவளி(அக்.24). கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் பண்டிகை இது. இந்நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு கொளுத்தியும், பலகாரங்களை உண்டும் மகிழ்வர். தீபாவளியன்று எண்ணெய்யில் மகாலட்சுமியும், வெந்நீரில் கங்கையும் வசிப்பதாக ஐதீகம். இந்நாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதால் பாவம் நீங்குவதோடு வீட்டில் லட்சுமி கடாட்சமும் பெருகும். வட மாநிலங்களில் தீபாவளியன்று லட்சுமி பூஜை நடத்துவர். சோட்டா தீபாவளி, படாதீபாவளி, கோவர்த்தன பூஜை என மூன்று நாளுக்கு விழா சிறப்பாக நடக்கும். இந்நாளில் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது, ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்கும் வழக்கம் இன்னமும் உள்ளது.