பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2022 03:10
பெரியகுளம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார- திருக்கல்யாண திருவிழா நேற்று துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடக்கும். நேற்று யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. நேற்று அக்.25 முதல் அக். 31 வரை ஏழு நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் மாலையில் பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். விரதம் மேற்கொண்ட பக்தர்கள்: பெரியகுளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கையில் கங்கணம் கட்டிக்கொண்டு நேற்று முதல் ஏழு நாட்கள் வரை விரதம் மேற்கொள்வர். விரதநாட்களில் உணவுகளை தவிர்த்து, கோயில் மற்றும் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடிய பிறகு, காலை, மாலை இருநேரங்கள் வாழைப்பழம், பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விரதம் தொடர்வர். கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் போது பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். முக்கிய திருவிழாவான 6ம் நாள் அக். 30 ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்ஹாரம், மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதேபோல் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது.