பதிவு செய்த நாள்
28
அக்
2022
05:10
பல்லடம்: அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.
பல்லடம் அடுத்த, கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. செப்., 8 அன்று இக்கோவில்கள் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 48 நாள் மண்டல பூஜை தினசரி நடந்து வருகிறது. நேற்று, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. முன்னதாக, அக்., 26 அன்று விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 108 சங்கு பூஜை, மற்றும் முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவற்றுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹூதி ஆகியவையும், நேற்று காலை, உண்ணாமலை அம்மன் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மனுக்கு சங்காபிஷேகம், மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் உலகேஸ்வரர், மற்றும் கரிய காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.