திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா: நாளை சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2022 09:10
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாளான நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜையும் நடந்தது. பின்பு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாகசாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முக விலாசத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி தங்கதேரில் கோயில் கிரிவீதி வலம் வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழா ஐந்தாம் நாளான இன்று கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா நாளை (30ம் தேதி) நடக்கிறது. நாளை கோயில் அதிகாலை1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது, மாலை 4.00 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.