பதிவு செய்த நாள்
25
ஆக
2012
11:08
தர்மபுரி: பிறந்த குழந்தை, நான் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்; எனக்கு பிடித்த குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன் என பேசியதாக, நேற்று நள்ளிரவு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில், மக்கள் மத்தியில், அதிகாலை, 2 மணியில் இருந்து, மொபைல்போன் மூலம், ஒரு எஸ்.எம்.எஸ்., பரப்பப்பட்டது. அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தை, பிறந்தவுடன், அதன் தாயிடம், நான் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்; எனக்கு பிடித்த குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன் எனக் கூறியதாக, தகவல் பரவியது. இந்த வதந்தி, ஊருக்கு ஊர் மாறுபட்டு பரவியது. பல ஆயிரம் குழந்தைகள் இறக்கும் என, வதந்தி பரப்பப்பட்டதால், பீதியடைந்த பெற்றோர், பக்கத்து வீட்டினருக்கும் தகவல்களை பரப்பினர். பரிகாரமாக, தங்கள் குழந்தைகளின் தலையில் தேங்காய் சுற்றி, திருஷ்டி கழித்து, ஆரத்தி எடுத்தனர். சிலர், மஞ்சள் நீரில் மிளகாய் வத்தல், கரி ஆகியவற்றை வைத்து, திருஷ்டி சுற்றி, முச்சந்திகளில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பரிகாரம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களிலும், பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு பரிகாரங்களை செய்து, தேங்காய் உடைத்தனர். ஊத்தங்கரை, மத்தூர், அரூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிலர், பேசிய குழந்தையைப் பார்க்க, காலை நேரத்திலேயே, மகப்பேறு வார்டுகளில் விசாரித்துச் சென்றனர். இதனால், மருத்துவமனையில் டாக்டர்கள் குழப்பம் அடைந்ததோடு, அது போன்ற சம்பவம் நடக்கவில்லை எனக் கூறி, அனுப்பி வைத்தனர். இது வதந்தி என்பது புரிந்தும், ஒரு தேங்காய் உடைப்பதால், என்ன செலவாகிவிடப் போகிறது எனக் கருதிய பெற்றோர், முச்சந்தியில் தேங்காய் உடைத்தனர். இதனால், பல தெருக்களில், தேங்காய் சிதறல்கள் காணப்பட்டன.
ஆந்திராவில் நடுங்கிய மக்கள்: ஆந்திர மாநிலம், ஐதராபாத், நிஜாமாபாத், கரீம் நகர், வாராங்கல் மாவட்டங்களிலும், இந்த வதந்தி வேகமாக பரவியது. அதில் சில, ருசிகர மாற்றங்களும் காணப்பட்டன.
ஐதராபாத், பஹாடேஷெரீப் பகுதியில், பல கை, பல கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது பிறந்த உடனேயே, தன் தாயிடம், இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்; அதற்கு முன், இன்று இரவு என்னுடன் பிறந்துள்ள அனைத்துக் குழந்தை களையும் பலி வாங்கி, அழைத்துச் சென்று விடுவேன் என்ற வதந்தி, எஸ்.எம்.எஸ்., மற்றும் போன் மூலம் பரவியது. இதை அறிந்த மக்கள் அதிர்ந்தனர்; பரிகாரங்கள் செய்தனர். செகந்திராபாத்தைச் சேர்ந்த ஜைனப் என்ற பெண், இந்தச் செய்தி எனக்குக் கிடைத்ததும், முதலில் அதிர்ச்சி அடைந்தேன். அது, யாரோ விஷமிகளின் வேலை என்பது புரிந்ததும், தூங்கி விட்டேன், என்றார்.
தேனி: தேனி, ஆண்டிபட்டி, கம்பம், உத்தமபாளையம், தேவாரம், வருஷநாடு உட்பட மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும், நேற்று மாலை முதல், இரவு வரை தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.
சிவகங்கை: சிவகங்கையில், ஆலமரத்து டீக்கடை அருகில் மூன்று ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தேங்காய்
உடைத்தனர்.
தேங்காய் விற்பனை அதிகரிக்க பரப்பிய வதந்தியா?
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சில மாதங்களாக தேங்காய் விற்பனை சரிவடைந்திருப்பதோடு, தேங்காய் விலையும் பரவலாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேங்காய் விற்பனையை குறி வைத்து, யாராவது விஷமிகள் இந்த வதந்தியை பரப்பி இருக்கலாம் என, தெரிகிறது. பொது மக்களிடம் வேகமாக பரவிய வதந்தியால், யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதால், இது குறித்து போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து, மாவட்டத்தில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்ற போதும், இது போன்று தொடர்ந்து பொது மக்கள் மத்தியில், அதிகாலை நேரங்களில் பரப்பும் வதந்திகளால், மக்கள் தூக்கம் இழந்து, என்ன செய்வது என, தெரியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை எறியும்படி வதந்தி கிளப்பினால் நம்புவரா?
பிறந்த குழந்தை பேசியது என்ற வதந்தியைக் கேட்டு, சிரித்தவர்களும் ஏராளம். அவர்கள் கூறியதாவது: பிள்ளையார் பால் குடித்தார்; மெஹந்தி போட்ட பெண் இறந்து போனார்; ஐந்து தலை நாகம் பிறந்துள்ளது; அம்மன் கண்ணிலிருந்து நீர் வடிகிறது; பிறந்த குழந்தை பேசியது, போன்ற வதந்தியை நம்புபவர்கள், நம்ம ஊரில், பகலிலேயே, ஆவி ஒன்று உலா வருகிறது; எதிரில் வருபவர்களின் உடலில் புகுந்து விடுகிறது; இதுவரை, 10 பேரின் உடலில், இந்த ஆவி புகுந்து புறப்பட்டு விட்டது; இதனிடமிருந்து தப்பிக்க, இரண்டு கிராம் தங்கத்தைத் தெருவில் தூக்கி எறிய வேண்டும் என, வதந்தி பரப்பினால், தங்கத்தைத் தூக்கி எறிய முன் வருவரா?தேங்காய் விலை, கட்டுபடியாகிறது என்பதால், அதை உடைத்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.