அன்னூர்: உருகாதேஸ்வரி அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.
மசக் கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செட்டிபாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான உம்மத்தூர் உருகாதேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. ஐந்து கால வேள்வி உடன் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று முன்தினம் நிறைவு விழா நடந்தது. வேள்வி பூஜை நடத்தப்பட்டு, பால், தயிர், தேன், பன்னீர், சந்தனம் என 16 வகை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.