ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளி தேர் புதுப்பிக்கப்பட்டு பளபளப்புடன் காணப்படுகிறது.
இக்கோயிலில் 90 ஆண்டுகள் பழமையான வெள்ளி தேர் உள்ளது. 20 அடி உயரமான தேரில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டு, கலை நயத்துடன் கூடிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் தேர் பராமரிக்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால் வெள்ளி தேர் கருமையாக மாறியது. இக்கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தும், தேரை புதுப்பிக்காத நிலையில் பக்தர்கள் வேதனை அடைந்திருந்தனர். இந்நிலையில் சில நாட்களாக வெள்ளி தேரை புதுப்பிக்கும் பணி நடந்தது. தற்போது பணிகள் முடிந்து வெள்ளி தேர் பளபளப்புடன் ஜொலிக்கிறது. வரும் காலங்களில் வெள்ளி தேர் தூசி படியாமல் முறையாக பராமரிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.