பதிவு செய்த நாள்
31
அக்
2022
07:10
தூத்துக்குடி,திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்., 25 யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. ஆறாம் நாளான நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடந்தது. ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. பின் ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் வந்தடைந்தார். தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. நேற்றுமாலை 4:00 மணிக்கு ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார். முதலில் கஜமுகனாக வந்த சூரபத்மனை மாலை 4:35 மணிக்கு வதம் செய்தார். தொடந்து சிங்கமுகனாகவும், பின் சுயரூபத்துடன் வந்த சூரபத்மனை வதம் செய்தார்.
கோயில் முன்பும் கடற்கரையிலும், நாழிக்கிணறு பகுதியிலும் லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பினர். பின் கடலில் நீராடி விரதம் நிறைவு செய்தனர். தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் ஜெயந்தி நாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று( அக்., 31) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இரண்டாண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டது. டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், எஸ்.பி.க்கள் சரவணன், பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி, அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை கமிஷனர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.