அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் சன்னதியில் தனி சன்னதியாக வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழாவான சூரசம்ஹாரம் கடந்த திங்களன்று முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. அதனையடுத்து விரதம் கடைபிடிக்கும் ஏராளமான பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் முருகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சியில், அன்னையிடம் சக்திவேல் வாங்கி சூரர்களை வதம் செய்ய முருகபெருமான் புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி உள்ளிட்ட நான்கு ரத வீதிகளிலும் கஜமுக சூரன், பானுகோபன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட சூரர்களை வதம் செய்து இறுதியாக சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். பின்னர் முருகப்பெருமானுக்கு வெற்றி வாகை மாலை சூடி சேவல் கொடி சாற்றுதல் மற்றும் சுவாமியை சாந்தப்படுத்தும் விதமாக சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சூரசம்கார நிகழ்ச்சியை அடுத்து இன்று காலை முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.