பதிவு செய்த நாள்
01
நவ
2022
01:11
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதூரில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சொர்க்கவாசல், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா, விநாயகர் ஆராதனையுடன் தொடங்கியது. இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, யாகசாலை பூஜை, ஆராதனை, வேத திவ்ய பிரபந்த பாராயணம், ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. பின்னர், புனித நீர் அடங்கிய தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. காலை, 6:00 மணி அளவில் ரமணன் ஐயங்கார் தலைமையில் ஆச்சாரியார்கள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. அன்னதானம், பாபா சன்ஸ்தான் கோவில் பஜனை, தேவையம்பாளையம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் நாலாயிர திவ்ய பிரபந்தம், பஜனைகள், பிருந்தாவன நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.