பதிவு செய்த நாள்
04
நவ
2022
04:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை, குண்டும் குழியுமாக உள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மருதமலை அடிவாரத்தில் இருந்து, மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை மற்றும் சாலை உள்ளது. அடிவாரத்திலிருந்து, மலைமேல் உள்ள கார் பார்க்கிங் வரையுள்ள 2.4 கி.மீ., தொலைவு சாலையில், வாகனங்கள் மலைக்கு மேல் சென்று வருகின்றன. இங்கு, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சாலை அமைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் சாலை புனரமைக்கவில்லை. இதுவரை பல லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வந்ததால், காலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த மலைப்பாதையில் மீண்டும் சாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் சாலையை புனரமைக்க, 3.66 மதிப்பில் திட்டம் மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வனப்பகுதி என்பதால் சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது, சாலையில், நாளை பேட்ச் ஒர்க் செய்யப்பட்டவுள்ளது,"என்றார்.