பதிவு செய்த நாள்
27
ஆக
2012
03:08
திருச்சி மண்டல தீயணைப்பு நிலையங்களில் மகிழ மரத்தடியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார் சித்தர் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி. சித்தராக வாழ்ந்த இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அன்புகோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லமுத்து பிள்ளை, பொன்னம்மாள் தம்பதி. இவர்கள் திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குடியிருந்தனர். இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக 13.6.1880ல் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி பிறந்தார். அவருக்கு கனகசபாபதி என பெயரிடப்பட்டது. 1901ம் ஆண்டு இவருக்கும், மாமன் மகள் சொர்ணத்தம்மாளுக்கும் திருமணம் நடந்தது. பொன்னமராவதியில் அரசு ஆசிரியராக வேலை பார்த்தார். நல்ல நூல்களை படிக்கும் வழக்கத்தை குருநாதர் மேற்கொண்டார். 1915ம் ஆண்டு சிதம்பரம் கோயில் கும்பாபிஷேகததிற்கு சென்ற குருநாதர் ஆறுமாதம் வரை வீடு திரும்பவில்லை. ஓராண்டு கழித்து குருநாதர் கண்டுபிடிக்கப்பட்டார். 1917ம் ஆண்டு மீண்டும் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. 11 ஆண்டுகள் கடந்த பின்னர் 1928ம் ஆண்டு திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் தவக்கோலத்தில் அடிகளார் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில் குருநாதர் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். ஒரு சமயம் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர், குருநாதரிடம் தனது வழக்கு தள்ளுபடியாக வேண்டும் என்று வேண்டினார். குருநாதரும் அவ்வாறே தள்ளுபடியாகும் என்று கூறி திருநீறு அளித்தார். அதன்படியே ஞானப்பிரகாசம் பிள்ளையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அது முதல் குருநாதரிடம் அவருக்கு நெருக்கம் அதிகமானது. இந்நிலையில் குருநாதர் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் படத்திற்கு கோர்ட் வளாகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைகண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் குருநாதரை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். ஞானப்பிரகாசம் பிள்ளை ஓடிச்சென்று தடுத்து, குருநாதரை சோழமாதேவியில் தன் வீட்டில் தங்க வைத்தார். குருநாதரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு கை கால்கள் இழுத்துக் கொண்டது. உடன் சுவாமிகளை தேடி வந்தார். குருநாதரும் மன்னித்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் அந்த அதிகாரி சுவாமிகளை மீண்டும் கோர்ட் வளாகத்திற்கே அழைத்து வந்து பணிவிடை செய்தார்.
குருநாதர் 11.10.1938 செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் திருமுன்பில் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அடிகள் எனப்பெயர் பெற்று ஒளிவடிவாய் அமைதி ஆலயம் பெற்றார். பின்னர் திருச்சி கோர்ட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மகிழ மரத்தடியில் சுவாமிகளுக்கு அழகிய கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. குருநாதர் தியானம் செய்த மகிழ மரத்தை சுற்றி சுவர் எழுப்பி, ஞாபகச் சின்ன கல்வெட்டு வைக்கப்பட்டது. 1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு இவர் மீது பக்தி அதிகம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் குருநாதரின் ஆலயம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் பூஜையும், ஆண்டுதோறும் குருபூஜையும் நடந்து வருகிறது.