அழியும் நிலையில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயில். தொல்லியல் துறை பாதுகாக்குமா ?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2022 04:11
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவில் வரலாற்றுச் சின்னம் அழிவின் விளிம்பில் உள்ளது. தொல்லியல் துறை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அருப்புக்கோட்டை பாலவனத்தம் அருகே சென்நெல்குடி கிராமம் உள்ளது. இங்கு 800 ஆண்டுகளுக்கு முந்தைய, பாண்டியர் கால சிவன் கோயில், கல்வெட்டுகள் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் பாழடைந்து கிடக்கிறது. சிதிலமடைந்த கோயிலில் மூலவர் இல்லை. அங்கு பூஜைகளும் நடப்பதில்லை. கருவறை பகுதியில் நாயக்கர் கால அய்யனார் சிற்பம் உள்ளது. கோயில் குறித்து, பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், " இந்த கோயில் இடைக்கால பாண்டியர் காலத்தில் உருவானது. மாறவர்ம பராக்கிரம பாண்டியனின் 7 ம் ஆட்சியாண்டு காலத்திய கல்வெட்டு இங்குள்ளது. இவர் ஆயிரத்து 130 முதல் ஆட்சி செய்து உள்ளார். இந்தக் கோயில் ஆயிரத்து137 இல் கட்டப்பட்டிருக்க வேண்டும். சோனாட்டு முல்லை சூடினான் ஸ்ரீ ராஜமாணிக்க நல்லூர் தான் செந்நெல்குடியின் பழைய பெயர்." என்றனர். கோயிலுக்கு அருகில் பழமையான கல் செக்கு உள்ளது. கோவில் சுவர்களில் எழுத்துக்கள் உள்ளன. பண்டைய வரலாறு கூறும் இது போன்ற கோயில்களை புனரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வரவும், பழமையான வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.