பதிவு செய்த நாள்
08
நவ
2022
10:11
திருச்சி : கேரளாவில் இருந்து கோவை வழியாக, வெளிநாடுக்கு விற்க முயன்ற, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டனர்.
கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு பழங்கால ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில், ஒரு மாதமாக, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த சிவபிரசாத், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான சிலையை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலை வாங்குபவர்கள் போல நடித்து, சிவபிரசாத்தை கோவை, இருகூர் பிரிவு பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு, ஹூண்டாய் கிரெட்டா காரில் வந்த சிவபிரசாத், 53, ஜெயந்த், 22, ஆகியோர் எடுத்து வந்த, 3 அடி உயர, திருவாச்சியுடன் இணைந்த நடராஜர் உலோக சிலையை போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் இருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்ததில், அது, 300 ஆண்டு பழமையான சிலையாக இருக்கலாம் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், சிலையை திருச்சிக்கு எடுத்துச் சென்றனர்.