பதிவு செய்த நாள்
08
நவ
2022
10:11
சென்னை:பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பெசன்ட்நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், 52வது அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் முதல், கோவிலின் உள்பகுதி முழுதும், ௧,௦௦௦க்கணக்கான கிலோ எடையுள்ள காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு, பக்தர்களால் அலங்கரிக்கப் பட்டது. காய்கறி, பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கோலம், பக்தர்களின் கண்குளிர வைத்தது. அதேபோல் காய்கறிகளைக் கொண்டு சிவன், முருகன், பிள்ளையார் மற்றும் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்ததும், பரவசமடையச் செய்தது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை 5:30 மணிக்கு, ரத்னகிரீஸ்வரர் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டார். பின், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 10:00 மணி வரை, ௧,௦௦௦க்கணக்கான பக்தர்களுக்கு சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் மற்றும் இனிப்பு அடங்கிய அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அரிசி, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை கேன்சர் மருத்துவமனை, ஆந்திரா மகிள சபா, வேதபாட சாலைகள், அவ்வை ஹோம், காக்கும் கரங்கள், உதவும் கரங்கள் உள்ளிட்ட, 45 தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்க உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.