மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்திடம் பாரம்பரிய அரிசி ரகங்களை கொடுத்து ஜப்பான் நாட்டினர் ஆசி பெற்றனர்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் நடிகை மியாசாக்கிமசுதி மற்றும் அவரது உறவினர்கள், சுப்பிரமணியன் என்பவரது தலைமையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று மாயூரநாதர் சுவாமி கோவிலில் ஜப்பானியர்கள் சடாச்சர ஹோமம் செய்து குமார கட்டளையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாயூரநாதர், அபயாம்பிகை அம்மன் சன்னதிகளில் வழிபாடு நடத்தினர். பின்னர் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது அவர்கள் ஜப்பானிய பாரம்பரிய அரிசியான முருகா என்ற அரிசி ரகத்தினை குரு மஹா சன்னிதானத்திலும் வழங்கி ஆசி பெற்றனர். முருக பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பதோடு, தமிழகத்தில் உள்ள ஆறுபடை கோவில்கள் பிரசித்தி பெற்ற கோவில்கள், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்வதோடு, ஜப்பானில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்த அரிசியை வழங்கியதாக தெரிவித்தார். ஜப்பானியர்கள் முருக பெருமான் மீது பற்றுடன் இருப்பதால் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் முருக பெருமான் சிலையினை அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கி ஆசி வழங்கினார். ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.