பதிவு செய்த நாள்
12
நவ
2022
03:11
திருநெல்வேலி: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம், கருஉருமாரி தீர்த்த குளம் சீரமைப்பு பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கிவைத்தார். நெல்லையப்பர் , காந்திமதியம்பாள் கோயிலில் ரூ.4 கோடி செலவில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம் மற்றும் கருஉருமாரி தீர்த்தக்குளம், அம்மன் சன்னதி மேற்கூரை தட்டோடு சீரமைப்பு பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார்.
இதில் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், நெல்லை கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.,க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், ரூபிமனோகரன், மாநகராட்சி மேயர் சரவணன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் , முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மை தீன்கான், துணைமேயர் ராஜூ, முன்னாள் எம்.பி., விஜிலா சத்தியானந்த், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, அறநிலையத்துறை இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, திருப்பணி இணைக் கமிஷனர் ஜெயராமன், உதவிக்கமிஷனர் கவிதா , செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கவுன்சிலர் உலகநாதன் , ராமகிருஷ்ணன் , முன்னாள் கவுன்சிலர் நமச்சிவாயம் (எ) கோபி, அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பணியை துவக்கிவைத்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஆய்வு செய்த போ து, பக்தர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம் மற்றும் கருஉருமாரி தெப்பம் தீர்த்தக்குளம், அம்மன் சன்னதி மேற்கூரை தட்டோடு பதிக்கும் பணிகளுக்கு ரூ.௪.௦௩ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு உபயதாரராக டிவிஎஸ்., குழுமத்தினர் உள்ளனர். ஓராண்டிற்குள் பணிகளை முடிப்பதாக டிவிஎஸ்., குழுமத்தினர் தெரிவித்துள்ளனர். நெல்லை எம்.எல்.ஏ., விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் காலணி பாதுகாப்பு அறை , பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகிய பணிகளுக்கு 2 மாதங்களுக்குள் அடிக்கல் நாட்டப்படும். கங்கைகொண்டான் கோயிலுக்கு ஒரு தேர் , ராஜவல்லிபுரம் கோயிலுக்கு ஒரு தேர் , நெ ல்லையப்பர் கோயில் தேருக்கு ஒரு கண்ணாடி அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை நெல்லை மாவட்டத்திற்கு வந்த போது,2021 – 2022ம் ஆண்டில் மாவட்டத்தில் 20 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 3 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதுபோல நெல்லை மாவட்டத்தில் 2022 – 2023ம் ஆண்டில் ரூ.32 கோடி செலவில் 30 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது 5 மாதங்களுக்குள் நெல்லை மாவட்டத்தில் 3 கோயில்களில் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கோயில்களில் அடுத்த ஆண்டு நிறைவுக்குள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்யப்படும். தமிழகத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். அது போல் சரித்திர நிகழ்வாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அந்த பணத்தில் தான் பிரம்மதேசம்
கைலாசநாதசுவாமி கோயிலில் ரூ.7கோடி செலவில் திருப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயிலில் ரூ.34லட்சம் செலவில் திருத்தேர் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 100 சிறிய கோயில்கள் சீரமைக்கப்படவுள்ளன. ஒரு கோயிலுக்கு ரூ.௧௫ லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகம் முழுதும் உள்ள ௧௧ கோயில் சிலைபாதுகாப்பு மையங்கள் ஒரு மாத த்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3700 கோடி சொத்துகள் மீட்கப்பட்டு, அதனை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.