தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த பழம்பெரும் நடிகை உட்பட ஐந்து பேர் வருகை தந்து, அந்நாட்டில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட முருகா என்ற பெயர் கொண்ட அரிசியை கோவிலில் காணிக்கையாக செலுத்தினர்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியை சேர்ந்த பழம்பெரும் நடிகை மியாசாகிமசூமி, இவர் பெரிய செல்வம், புகழ் ஆகியவற்றை நிறைவாகப் இருந்த போதும், மன நிம்மதி இல்லாமல் தவித்து வந்தார்.இந்நிலையில் தமிழ் மொழியை கற்று தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களின் பெருமையை அறிந்து அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக தனது பெயரை ஷன் மாதாஜி என மாற்றிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணமாக இலங்கை கண்டி கதிர்காம முருகன், தமிழகத்தில் உள்ள முருக கோவில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். ஐந்து பேர் கொண்ட இக்குழுவினரை ஜப்பான் நாட்டில் 35 வருடங்களாக தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வழி நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்ட அவர்கள் கூறியதாவது,தமிழ் மற்றும் ஜப்பான் இரண்டு மொழிகளும் முற்றிலும் ஒன்றானது. தமிழில் நாமம் என்பதை ஜப்பானில் நமாயே என்று அழைப்பார்கள் இவ்வாறு எண்ணற்ற தமிழ் சொற்கள் ஜப்பான் மொழியில் உள்ளதாக கூறினர். மேலும், தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளும் ஜப்பானியரின் வாழ்வியல் நெறிமுறைகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஜப்பான் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பொன்னி விதை நெல் ரகங்களை ஜப்பானில் முருகா எனும் பெயரில் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறோம். இந்த அரிசியை பல்வேறு கோவில்களில் காணிக்கையாக செலுத்தி வருகிறோம். தமிழக முதல்வரை சந்தித்து அவருக்கும் முருகா எனும் பெயர் கொண்ட அரிசியை வழங்க உள்ளோம். மேலும், ஜப்பானில் 5 சிவத்தலங்களும், முருகக் கடவுள் வீற்றிருக்கும் வழிபாட்டு தலங்களான அறுபடை கோவில்களை நிர்மாணிக்க உள்ளோம். தொடர்ந்து திருவண்ணாமலை திருச்செந்துார் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபட உள்ளோம் இவ்வாறு தெரிவித்தனர்.