பதிவு செய்த நாள்
29
ஆக
2012
10:08
சபரிமலை: ஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பலத்த மழையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடை திறந்திருக்கும் நான்கு நாட்களிலும், பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, ஓணம் பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதன்பின், ஓணம் பண்டிகை விருந்துக்குத் தேவைப்படும் பதார்த்தங்களை தயார் செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. நேற்று மதியம் உச்சிக்கால பூஜைக்குப் பின், பக்தர்களுக்கு உத்திராட ஓணம் விருந்து பரிமாறப்பட்டது. பால் பாயாசம், அடை பிரதமன் ஆகிய இரு இனிப்புகளுடன், 20 வகைப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இன்று, நாளை, நாளை மறுநாளும் விருந்து வழங்கப்படும். சபரிமலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடை திறந்திருக்கும் நாட்களில் தினமும், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சந்தன அபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் முடிந்து, நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். இதன்பின், புரட்டாசி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை அடுத்த மாதம், 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.