பதிவு செய்த நாள்
29
ஆக
2012
10:08
கேரள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழா தான் ஓணம் பண்டிகை. இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. இதை, "கேரளாவின் பொங்கல் என்றும் கூறுகின்றனர். இப்பண்டிகையின் போது அத்தப் பூக்கோலம், கயிறு இழுத்தல், களறி, படகு, பாரம்பரிய நடனம் என பல போட்டிகள் நடைபெறும்.
ஒன்றல்ல 10 நாள் :
பண்டிகை காலத்தின், முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திர், மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை, இப்பட்டியலில் இடம் பெறும். ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்று, பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பங்கு பெறுவோர், வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவர். ஆறாம் நாள் திருகேட்டை , ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் நாட்கள் முறையே மூலம், பூராடம், உத்திராடம். பத்தாம் நாள், திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் முடிகிறது
மன்னனுக்கான கொண்டாட்டம்
மஹாபலி என்ற மன்னர், கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். இம்மன்னனை நினைவு கூர்ந்து, மீண்டும் வரவேற்கும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் சிறப்பம்சம், வீட்டு வாசலில் போடப்படும் பூக்கோலம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பிள்ளைகள், பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத் தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன், கோலத்தை அழகுபடுத்துவர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.
சிறப்பு உணவுகள்
கேரள உணவு, என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.
ஓணம் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து :
முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
திருவோணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும், ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். திருமால், வாமன அவதாரம் பூண்டு, மகாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி, ஆண்டு தோறும், மக்களை தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள்புரிந்தார்.அதன் படி, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், திருவோணத்தன்று மலையாள மக்களால், ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகையின் போது மக்கள், ஏழை மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி, ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பர். பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீங்கி, ஆணவம் அகன்று, சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தை, இந்த ஓணம் பண்டிகை உணர்த்துகிறது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி:
கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல், மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் ஓணம் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது. மாவீர மன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியை ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால் கொன்று விட்டாலும், தான் நேசித்த மக்களிடம் மாறா அன்பு கொண்ட அந்த மகாபலி மாமன்னனை எண்ணிக் கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் திருநாள் இனிய பண்பாட்டுத் திருநாளாகவும், அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
தமிழக காங்., தலைவர் தலைவர் ஞானதேசிகன்:
மனித சமுதாயத்தில் தியாகத்தின் மேன்மையைப் போற்றுவது ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகைத் திருநாளில் மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்கள்.