பிள்ளையார்பட்டியில் இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2022 11:11
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பை அடுத்து இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கோயிலில் காலை 6:00 மணிக்கு நடை திறந்து காலை 6:30 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்குவர். மூலவர் தங்கக்கவசத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து திருவனந்தால், காலை 8:00 மணிக்கு காலச்சந்தி, காலை 11:00 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடந்து மூலவருக்கு அபிேஷகம் நடந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் காலை 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு சாயரட்சை, இரவு 7:30 மணிக்கு அர்த்தசாமம் பூஜைகள் நடந்து இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும். இன்று கார்த்திகை மாதம் பிறப்பதை அடுத்து சபரிமலை மற்றும் பழனி செல்லும் அய்யப்பன் மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிகின்றனர். இவர்கள் விரத காலத்தில் ஆன்மீக பயணமாக பிள்ளையார்பட்டி வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் வரை கூடுதல் நடை திறப்பது வழக்கம். இது குறித்து பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுர் என்.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன்செட்டியார் ஆகியோர் கூறுகையில்,‛ விரத காலத்தில் பக்தர்களின் வருகை அதிகரிக்கிறது. அவர்களின் பயணம் தாமதமின்றி தொடரவும், நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யவும் இந்த கூடுதல் நடை திறக்கப்படுகிறது. வழக்கமான நேரத்தில் பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.