பதிவு செய்த நாள்
18
நவ
2022
08:11
சபரிமலை, புல்மேடு மற்றும் பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக பயணம் செய்ய நேரவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சபரிமலையில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெருமழையும், கொரோனாவும் ஏற்படுத்திய தடைகளுக்கு பின்னர் இந்த சீசனில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த பெருவழிப்பாதை, புல்மேடு பாதை போன்ற அனைத்து பாதைகளும் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருவழிப்பாதையில் செல்பவர்கள் எருமேலியில் மாலை 4:00 மணிக்கு முன்னரும், புல்மேடு பாதையில் வருபவர்கள் சத்திரத்தில் மதியம் 2:00 மணிக்கு முன்னரும் புறப்பட வேண்டும். இந்த பாதைகளில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் நிறுவப்படும். சன்னிதானம், பம்பை அரசு மருத்துவமனைகளில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடத்துவதற்காக அதற்குரிய முதுநிலை டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் அதற்கேற்ப அனைத்துதுறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும். பக்தர்கள் பாதை ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் நிலையை முழுமையாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருவாயூர், கொச்சி, மலபார் தேவசம்போர்டுகளும் பக்தர்களுக்கு தேவயான வசதிகளை அந்தந்த பகுதிகளில் செய்யும். முககிய வழிபாட்டு பிரசாதமான அப்பம், அரவணை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரவணை 16 லட்சம் டின், அப்பம் இரண்டு லட்சம் பாக்கெட் ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. தினமும் ஒன்றே முக்கால் லட்சம் டின் அரவணை தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.