வேலுார்:வேலுார் வந்த ராமராஜ்ய ரதத்தை பக்தர்கள் வழிபட்டனர்.
அயோத்தியிலிருந்து பல மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்த ராம ராஜ்ய ரத யாத்திரை வேலுார் திருமலை- திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்திற்கு இன்று இரவு வந்தது. இந்த ரதத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ரதத்திற்கு தீபாரனை செய்து வழிபாடு நடத்தினர். இந்த ரத யாத்திரை சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், காட்பாடிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று அங்கிருந்து ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு செல்கிறது.
இது குறித்து ராம ராஜ்ய ரத யாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவை மீண்டும் பாரதம் என அழைக்க வேண்டும், கல்வி பாடத்தில் ராமாயணம் மற்றும் உண்மையான இந்திய வரலாற்றை சேர்க்க வேண்டும் என இந்த யாத்திரை மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.