சுருளி அருவியில் எழுந்த சரண கோஷம் : திரளாக பக்தர்கள் மாலை அணிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2022 04:11
கம்பம்: சுருளி அருவியில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்தனர். சரண கோஷம் விண்ணைப் பிளந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறந்திருந்தபோதும், பிரதானமாக மகரவிளக்கு, மண்டல பூஜை எனப்படும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் நிறைவு பெறும் இரண்டறை மாதம் தான் முக்கியமானது. கார்த்திகை முதல் தேதி விரதம் துவங்கி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதத்தை ஐயப்பனை தரிசித்து நிறைவு செய்வார்கள். இந்தாண்டு நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சுருளி அருவிக்கு அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் வரத் துவங்கினர். அருவியில் குளித்து தங்களின் குருசாமியிடம் இங்குள்ள பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற் மாலை அணிந்து கொண்டனர். அதிகாலையில் சுருளி அருவியில் எழுந்த சரண கோஷம் விண்ணைப் பிளந்தது. உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் படித்துறை, சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். வழக்கமாக செல்லும் பக்தர்கள் தாங்கள் அணியும் துளசி மாலையை அணிந்தனர். புதிதாக போடும் கன்னி சாமிகள் கடைகளில் துளசி மாலை, காவி மற்றும் கறுப்பு நிற உடைகளை வாங்கி அணிந்தனர்.