பதிவு செய்த நாள்
18
நவ
2022
06:11
தஞ்சாவூர், ஆடுதுறை மருத்துவக்குடியில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று (18ம் தேதி ) ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் காவிரி தீர்த்தம் எடுத்து வர, அலங்கார ரதத்தில் 45 புனித நிதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களின் குடம் மற்றும் சுவாமி, அம்பாள் மூர்த்தங்களுடன் புறப்பாடு நடந்தது.
அலங்கார யானை, குதிரைகள், ரிஷபம் ஆகியவை அணிவகுக்க செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க புனித தீர்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், பேரூர் ஆதீனம் சோழமண்டலம் ஸ்ரீமத் சிவப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கோவிலில் கடத்திற்கு சிறப்பு மகா தீபாரதனை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் மூலவர் விமானங்களின் கலசம் பிரதிஷ்டை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.