அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. நூறு ஆண்டுகளாக வற்றாத சுனை இக்கோவில் வளாகத்தில் உள்ளது. கோவிலில் புதிதாக முன் மண்டபம், கோபுரம், ஆகியவை அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 18ம் தேதி காலையில் முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், கலசங்கள் நிறுவுதலும் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு, விநாயகர், வட்டமலை ஆண்டவர், கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது, இதையடுத்து அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது, மாலை 4:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், இரவு சுவாமி திருவீதியுலா மற்றும் வள்ளி கும்மி ஆட்டம் நடக்கிறது.