பதிவு செய்த நாள்
20
நவ
2022
10:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வரும் நிலையில், போதிய அடிப்படை வசதியின்றி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் போதும், சென்று திரும்பும் போதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் ரதவீதிகளில் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை தீர்க்க போதிய சுகாதார வளாகம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆடிப்பூரக் கொட்டகையில் உள்ள ஒரே ஒரு சுகாதார வளாகம் தான், அனைவரும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாலை 6:00 மணிக்கு மேல் மாட வீதி, ரத வீதிகளில் பக்தர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. அதிகாலையில் வரும் பக்தர்கள் தங்களது காலைக்கடன்களை முடித்து, குளித்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்ய போதிய வசதி இல்லாமல், சுகாதார வளாகங்கள் எங்கு இருக்கின்றன என கேட்டு அலைகின்றனர். பல வருடங்களுக்கு முன்பு வரை கீழரதவீதியில் ரோட்டரி கிளப் சார்பில் ஒரு சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது. ஆண்டாள் கோயில் கெஸ்ட் ஹவுஸ் அமைக்கப்பட்ட பிறகு, அந்த சுகாதார வளாகம் மூடப்பட்டது. இதேபோல் பழைய ஸ்டேட் பாங்க் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சுகாதார வளாகம் தற்போது செயல்பாடின்றி கிடக்கிறது. இதனால் ஆண்டாள் கோயிலை சுற்றியுள்ள கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சுகாதார வளாகங்களை தேடி அலைகின்றனர். எனவே, மூடப்பட்ட சுகாதார வளாகங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆண்டாள் கோவில் நிர்வாகமும், கூடுதல் சுகாதார வளாகங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.