பதிவு செய்த நாள்
22
நவ
2022
08:11
விக்கிரமசிங்கபுரம்: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் சங்கிலி பூதத்தாருக்கு ரூ.10 லட்சத்தில் தங்க அங்கி அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் சபரிமலை ஐயப்ப சன்னிதானத்திற்கு மூலஸ்தானமாக கருதப்படுகிறது. மேலும் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் குலதெய்வமாக சொரிமுத்து அய்யனாரை வணங்கி வழிபட்டு வருகின்றனர். பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலில், சங்கிலி பூதத்தார், மகாலிங்கசாமி, தளவாய் மாடசாமி, கரடி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்நிலையில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் உள்ள சங்கிலி பூதத்தாருக்கு சுமார் ரூ.10 ட்சம் மதிப்பில் தங்க அங்கியை கோயில் பொறுப்பாளர் டி.என்.எஸ்.எம். சங்கராத்மஜன் ராஜா முன்னிலையில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ரோகிணி சண்முகம் மற்றும் கருங்கடல் குடும்பத்தினர் அணிவித்தனர். சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை, படையல் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.