பதிவு செய்த நாள்
23
நவ
2022
03:11
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இத்தலத்தில் மார்க்கண்டேயருக்காக சுவாமி, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற திருக்கடையூர் கோவிலுக்கு இன்று காலை 60 வயது தொடங்கியதை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அவரது மனைவி அனுராதா, மகள் ஜெயஹரனியுடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 64 கலசங்கள் அமைக்கப்பட்டு, உக்கர ரத சாந்தி ஹோமம் மற்றும் பூஜைகள் செய்தார். தொடர்ந்து டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதாவுக்கு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் தம்பதியர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அதனை அடுத்து டிடிவி.தினகரன் குடும்பத்தினருடன் அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் உதவியாளர் ஜனார்த்தனம், அமமுக. மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான 15 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.