பதிவு செய்த நாள்
24
நவ
2022
11:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான மவுனசாமி மடத்தின் நிர்வாகி பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக, பல்வேறு ஹிந்து அனுப்பினர், 20 பேர் கையெழுத்திட்ட மனுவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சமீபத்தில் வழங்கினர்.
இதையடுத்து, மடத்தின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்தனர். ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிறப்பித்த சோதனை உத்தரவுகளுடன் மவுனசாமி மடத்தில் சோதனை செய்தனர். சோதனையின் போது, மடத்தின் ஒரு பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சிலைகளை குழுவினர் கண்டுபிடித்தனர். சிலைகளின் ஆதாரத்தை நிரூபிக்குமாறு மடாலய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மடத்து அதிகாரிகளால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை, மேலும் அவர்கள் தங்களிடம் உள்ள சிலைகள் ஆதாரம் இல்லாத சட்டவிரோத சிலைகள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையெடுத்து, 23 செ.மீ., உயரம் உள்ள நடராஜர், 14 செ.மீ.. உயரம் உள்ள திருவாசியுடன் கூடிய சிவகாமி அம்மன் சிலை,11 செ.மீ., உயரமுள்ள விநாயகர்,37 செ.மீ., உயரம் உள்ள பாலதண்டாயுதபாணி சிலைகள் மற்றும் 63 நாயன்மார்கள் தஞ்சாவூர் பாணி ஓவியம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.