பதிவு செய்த நாள்
25
நவ
2022
08:11
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்களுள் சிவபெருமானை பிரதானமாகக் கொண்ட கோயில்கள் யாவும் சித்தாந்தசைவம் என்ற சைவமரபைச் சார்ந்தவை. சித்தாந்த சைவமரபுக்கு அடிப்படை ஆதார நுால்கள் சிவ ஆகமங்கள். அவை காமிகம் முதல் வாதுளம் வரையாக 28 உள்ளன.
அவ்வாகமங்கள் கோயில் கட்டுவதற்கான இடத்தை தேர்வுசெய்வதற்கான காலத்தை ஆராய்வது தொடங்கி, பூமியை ஆராய்தல், தேர்ந்தெடுத்தல், துாய்மைப்படுத்துதல், கோயில் கட்டுதல், விமானம், கோபுரம், மண்டபங்கள், குளங்கள் ஆகியன அமைத்தல், திருவுருவங்களை அமைத்தல், திருவுருவங்களை பிரதிஷ்டை செய்தல், நித்யவழிபாடுகள் செய்தல், திருவிழாக்கள் செய்தல், தவறுகள் ஏற்பட்டால் அதற்கான மாற்று செய்தல், பழுதுகள் ஏற்பட்டால் அவற்றை நீக்குதல் போன்ற எல்லா விஷயங்களையும் விரிவாக விளக்குகின்றன. அதேபோல பூஜை செய்பவர்களை பற்றியும், பூஜைகளை எப்போது எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றியும், பூஜைக்கான பொருட்களைப் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளன.
வேதனைக்குரிய விஷயம்: பெருமைவாய்ந்த கோயில்களின் கலைக்களஞ்சியங்களாகிய ஆகமங்களுள் பல நுால்வடிவம் பெறாமல் ஓலைச்சுவடிகளாகவும் காகித பிரதிகளாகவும் இருந்து வருகின்றன. தமிழகத்தின் வரலாற்று சான்று ஆவணங்களாகிய ஈராயிரம் ஆண்டு பழமைகொண்ட அவ்வாகமங்களை பதிப்பிக்கும் பணியை கோயிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றுகொண்ட எந்த அரசும் செய்யவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
இந்நிலையில் அரசால் பொதுமக்கள் விருப்பம் என்ற பெயரில் செய்யப்படுகின்ற மாற்றங்கள் எல்லாம் சமயமரபுகளை காலத்தால் அழிக்கும் வண்ணமாகவே அமைந்திருப்பதை பார்க்க முடிகிறதே தவிர சமயத்திற்கோ, கோயில்களுக்கோ, சமயமரபுகளுக்கோ எந்தவிதத்திலும் நன்மை அளிப்பதாக இல்லை என்பதே நிதர்சனம்.
அந்நியர்கள் ஆட்சியில் எல்லாம் கூட காப்பாற்றப்பட்ட மரபுகள் சமய சார்பற்றவர்கள் என சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் அழிக்கப்படுவதை பொதுமக்கள் உணரவில்லை. கோயில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மட்டுமே ஆராய வந்த துறையால் கோயில் மரபுகள் அழிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம். தவறை தட்டிக்கேட்க வேண்டியவர்களே தவறுசெய்தால் எங்கே முட்டிக்கொள்வது. உதாரணமாக கோயில்களுக்கு ஒரு குறிப்பிட்ட பூஜை அல்லது திருவிழா நிரந்தரமாக நடப்பதற்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பொதுச்சொத்து என்ற பெயரில் அரசால் கையகப்படுத்தப்படும்போது எந்த நிகழ்வு நடைபெறுவதற்காக அந்த நிலம் அளிக்கப்பட்டதோ அந்த நிகழ்வு நின்றே போய்விடுகிறது. இதன் அடிப்படையில் அடிப்படை பராமரிப்பே இல்லாமல் கோயிலின் இருப்பிடமே இல்லாமல் பட்டியலில் மட்டும் பெயர் உள்ள கோயில்கள் ஏராளம்.
வழக்கத்திற்கு மாறானது: அதேபோல ஆதீனங்களும், தனிநபர்களும் நடத்துகின்ற பாடசாலைகளின் பாடத்திட்டம் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 8 ஆண்டுகள் என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. அதிலும் ஒவ்வொரு பாடசாலையிலும் நடத்தப்படுகின்ற பாடங்களில் தனித்தனியே பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு. நடைமுறையிலும்கூட ஆகமங்கள் அளித்திருக்கின்ற பல்வேறு நடைமுறைகளுள் அவரவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்த முறைகள் சென்னை வழக்கம். திருக்கழுக்குன்றம் வழக்கம், காஞ்சீபுரம் வழக்கம், மதுரை வழக்கம், தஞ்சாவூர் வழக்கம் என்ற பெயரில் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே எந்த பாடசாலையில் பயின்றாலும் அந்தந்த ஊர் வழக்கத்தை அவர்கள் பின்பற்றியே ஆகவேண்டும். சென்னை உயர்நீதிமன்றமும் அர்ச்சகர் நியமனத்தில் ஆகமங்களும், கோயில்களின் பழக்கவழக்கமும் பின்பற்றப்படவேண்டும் என்பதை ஒரு வழக்கில் மீண்டும் உறுதிசெய்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாமல் ஒரே ஆண்டு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை எல்லா கோயில்களிலும் நடைமுறைப்படுத்தும்போது 5, 8 ஆண்டு பாடத்திட்டங்கள் வலுவிழந்து அழிந்து போகும். மேலும் திருத்தலங்களுக்கான சிறப்பம்சங்கள் முற்றாக அழியும் அபாயம் இருக்கிறது.
ஓராண்டில் என்ன கற்க முடியும்: அர்ச்சக மரபில் வருகின்ற மாணவர்களாலேயே ஓராண்டில் எதையும் படிக்க முடியவில்லை என்பதை கண்கூடாக காண்கிறோம். இந்நிலையில் புதிதாக இத்துறைக்கு வரும் மாணவர்களால் ஓராண்டில் என்ன படிக்க முடியும் என்று தெரியவில்லை. தமிழ் வழிபாடு என்ற பெயரில் மதச்சார்பற்ற அரசால் மதம் சார்ந்த கோயில்களில் செய்யப்படுகின்ற செய்ய முனைகின்ற மாற்றங்கள் அனைத்தும் சமயவிரோதச் செயல்கள்.
தமிழை வளர்ப்பதற்கென்றே தனித் துறை இருக்கும்போது அத்துறையின் மூலம் தமிழ்வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யாமல், கோயில்களில் மொழியின் அடிப்படையில் வழிபாட்டை மாற்ற முனைவதன் மூலம் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி, சமய நுால்களை கருத்தில் கொள்ளாமல் ஓட்டெடுப்பு நடத்தி அவற்றைத் தீர்மானம் செய்வதெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் சமயத்திற்கு அளித்துள்ள சமய உரிமைகளைக் குழிதோண்டி புதைக்கும் செயல்கள். அதிகார துஷ்பிரயோகங்கள்.
கோயில் பூஜை தொடர்பான நுால்கள் ஆகமங்களும் ஆகமங்களின் அடிப்படையில் எழுந்த பத்ததி என்ற வகையைச் சார்ந்த நுால்களும் மட்டுமே. அவை வடமொழியிலேயே அமைந்திருக்கின்றன. சமயக்குரவர்களாகிய நம் ஆச்சாரிய பெருமக்கள் அந்நுால்களை புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். ஆகமக் கருத்துகளை மொழிமாற்றம் செய்யலாமே தவிர கிரியைகளையும் அவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்ற மந்திரங்களையும் மொழிமாற்றம் செய்தல் முறையாகாது. மந்திரங்களை பயன்படுத்தி செய்யப்படுகின்ற கிரியைகளால் உண்டாகும் பலன் திருமுறைகளை ஓதினாலே ஏற்படும் என்பதை திருமுறைகளைப் படித்தவர்களும் ஓதுபவர்களும் அறிவார்கள். அத்தகையை பெருமைவாய்ந்த திருமுறைகளை கிரியைகளுக்குப் பயன்படுத்துதல் திருமுறைகளையும் அவமதிக்கும் செயல். சிவ ஆகமங்களையும் அவமதிக்கும் செயல்.
ஆகமக் கோயில் எது என்பதை கண்டறிய உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அவமதிக்கும் வகையில், யாரோ ஒரு தனிநபர் பரிந்துரைத்த, ஆகம வல்லுனர்களும், சிற்ப வல்லுனர்களும் இணைந்து ஆராய்ந்து பதிலளிக்கவேண்டிய வகையிலுள்ள 50 கேள்விகளை இணை ஆணையர்களின் மூலமாக கோயில்களுக்கு அனுப்பி சாதாரண அர்ச்சகர்களை ஒருவாரத்திற்குள் அவற்றிற்கான பதில்களை எழுதித் தரவேண்டும் என வாய்மொழியாக அழுத்தம் கொடுப்பது மரபை அழிப்பதிலேயே அரசு முனைப்பாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
- சிவஸ்ரீ க. கார்த்திகேய சிவம்,
ஆகம ஆசிரியர், திருப்பரங்குன்றம்: தமிழை வளர்ப்பதற்கென்றே தனித் துறை இருக்கும்போது அத்துறையின் மூலம் தமிழ்வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யாமல், கோயில்களில் மொழியின் அடிப்படையில் வழிபாட்டை மாற்ற முனைவதன் மூலம் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி, சமய நுால்களை கருத்தில் கொள்ளாமல் ஓட்டெடுப்பு நடத்தி அவற்றைத் தீர்மானம் செய்வதெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் சமயத்திற்கு அளித்துள்ள சமய உரிமைகளைக் குழிதோண்டி புதைக்கும் செயல்கள்.