பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.
இக்கோயிலில் பெருந்தேவி சமேத வரதராஜப்பெருமாளுக்கு 40 ஆம் ஆண்டு லட்சாச்சனை விழா நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து கும்பத் திருமஞ்சனம், அனுக்கை மற்றும் சோடஸோபசார தீபாரதனைகள் நடந்தன. பின்னர் 8:30 மணி தொடங்கி மதியம் 12:00 மணி வரையும், மாலை 6:00 மணி தொடங்கி இரவு 9:00 மணி வரையும் லட்ச அர்ச்சனைகள் நடந்தன. அப்போது மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு துளசி மற்றும் மலர்களால் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சவுராஷ்ட்ர சபையார் மற்றும் லட்சார்ச்சனை கமிட்டினர் செய்திருந்தனர்.