பதிவு செய்த நாள்
01
டிச
2022
08:12
அவிநாசி: ஆதிமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இதனையடுத்து கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாக கமிட்டியினர் முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை பூஜைகள் கடந்த திங்களன்று மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து நவக்கிரக ஹோமம்,தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரண்டாம் கால யாக பூஜையில் வேதிகார்ச்சனை, மூல மந்திர ஹோமங்கள், பூர்ணாகுதி உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்று ஆதி முத்து மாரியம்மன் விமான கலசத்திற்கு திருமுருகன்பூண்டி சிவாஜல சிவாச்சாரியார், சிவகாம பிரவீன பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவையொட்டி திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் இருந்து சிறப்பு பூஜைக்கு 500ம் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து அங்குள்ள கருப்பராய சுவாமி கோவிலில் பூஜை செய்து ஆதிமுத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர்.கும்பாபிஷேக விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் நடைபெற்றது