கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முஸ்லிம் கட்டிய வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு, ஊர்மக்கள் ஆதரவோடு கும்பாபிஷேகம் நடந்தது.
கிருஷ்ணகிரி, காமராஜ் நகரிலுள்ள பெரிய பாறையில் கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், வீர ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அதே பகுதியில், தர்கா நிர்வாகியாக செயல்பட்டு வரும் இஸ்லாமியரான பாபாசாமி, 70, என்பவர் ஊர்மக்கள் துணையுடன் கடந்த, 1983ல் வீர ஆஞ்சநேயருக்கு கோவில் ஒன்றை கட்டி, தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார். இவர் கோவில் கட்டியபோது பலர், இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் ஊர்மக்கள் இவருக்கு ஆதரவாக இருந்ததால், கடந்த, 36 ஆண்டுகளாக தொடர்ந்து, வீர ஆஞ்சநேயர் கோவிலையும், தர்காவையும் பராமரித்து வருகிறார். தற்போது, இக்கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அபிஷேகத்துக்கு பின், ஆஞ்சநேயர் தங்கக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.