தற்போது பலரும் பேராசை என்னும் வாகனத்தின் மீது பயணம் செய்கிறார்கள். இந்த வாகனம்தான் அவர்களை தவறான பாதைகளுக்கு இழுத்துச் செல்கிறது. சிலருக்கு இந்த பயணம் சிறியதாக அமைகிறது. இவர்களிடம் ஒரு நல்ல குணம் இருக்கும். அதுதான் போதும் என்ற மனம். இப்படி தேவைகளை குறைத்தால் ஆசையும் குறையும். மனதில் அமைதியும் வலம் வரும். இதற்காக ஆசைப்படவேக் கூடாது என்று சொல்லவில்லை. அழகான வீடு, அளவான பணம், அன்பான குடும்பம், நிறைவான மனம் என்று இருந்தால் போதும்தானே. இதுதான் உடல்நலத்திற்கும் நல்லது. எப்படி என்றால் ஒரு வீணையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நரம்புகள் முறுக்கேறினால் நல்லிசை பிறக்கும். முறுக்கிக் கொண்டே போனால் நரம்பு இருக்காது. இதுவே நரம்புகள் தளர்ந்து இருந்தால் வீணையை மீட்டவே முடியாது. இப்படி வீணையில் நரம்புகள் தளராமலும், முறுக்கேறாமலும் இருந்தால் இன்னிசை பிறக்கும். நம் வாழ்க்கையும் ஒரு வீணைதான். இதில் பேராசை என்னும் நரம்புகள் சரியாக இருந்தால் இன்னிசை என்னும் இன்பம் பிறக்கும்.