அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாளை இலவச திருமண திட்டத்தின் கீழ் 15 ஜோடிகளுக்கு திருமணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 04:12
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாளை இந்து சமய அறநிலையத்துறையின் இலவச திருமண திட்டத்தின் கீழ் 15 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு படி இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் இலவச திருமணம் நடத்துவது தொடர்பாக கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் 25 ஜோடிகள் என 20 மண்டலங்களில் 500 மணமக்களுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் இணை ஆணையர் முன்னிலையில் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவு பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து வரும் 4ம் தேதி காலை 7.45மணி முதல் 8.45 மணிக்குள்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் மணமகளுக்கு இரண்டு கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், மணமக்கள் ஆடை, மணமக்கள் இரு விட்டார்களிலிருந்தும் 20 நபர்களுக்கு உணவு, மணமக்கள் மாலை, பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ 20,000 மதிப்புள்ள திருமணத்திற்கான சீர் வரிசைகள் வழங்கப்படும்.திருமணத்திற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கோவில் நிர்வாகத்தினர் செய்வார்கள் என உதவி ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.