பதிவு செய்த நாள்
04
டிச
2022
12:12
திருப்பதி: திருமலையில், வரும் 17ம் தேதி முதல், சுப்ரபாதத்திற்கு பதிலாக, திருப்பாவை சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.
திருமலை அன்னமய்ய பவனில் நேற்று பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில் பங்கேற்ற பக்தர்களிடம் தேவஸ்தான செயல் இணை அதிகாரி தர்மா ரெட்டி பதில் அளித்த பின் கூறியதாவது: இரவு முதல் காத்திருப்பு அறைகளில் இருக்கும் பக்தர்கள், காலையில் திரு மலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரம் காலை, 8:00 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 15 ஆயிரம் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியும். ஜன., 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி முதல், 11ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுவோம். இதேபோல், திருப்பதியில் உள்ள கவுன்டர்கள் வாயிலாக, ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு ஐந்து லட்சம் இலவச தரிசன டோக்கன்களை வழங்குவோம். இந்த டோக்கன்களை யார் வேண்டுமானாலும் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி தரிசனத்திற்கு வரலாம். டிச., 16-ம் தேதி மாலை, 6:12 மணிக்கு மார்கழி மாதம் துவங்குவதால், டிச., 17-ம் தேதி முதல் திருமலை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்குப்பதிலாக திருப்பாவை பாராயணம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.