பதிவு செய்த நாள்
06
டிச
2022
05:12
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று பெண் பார்க்கும் நிகழ்ச்சியில், திருமண வீட்டார் சார்பில், ‘போட்டோ சூட்’ நடத்தியதால், பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கோவில்களில் சிலைகளை பாதுகாப்பது, பிற காரணங்களுக்காக, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 2ல், உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவில்களில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து, பக்தர்கள் கலாசார உடையணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவை, அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், பெண் பார்க்கும் நிகழ்வு, திருமணம் உள்ளிட்டவை நடத்தப்படுவது வழக்கமாகும். இதற்கு, குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், பெண் பார்க்கும் நிகழ்ச்சியில், ஸ்டூடியோவில் போட்டோ எடுப்பதை போல, குடை, விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி, மணமகன், மணமகளை நிற்க வைத்து, ‘போட்டோ சூட்’ நடத்தியது, பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் சுதா கூறுகையில், ‘‘கோவிலில், போட்டோ சூட்’ நடத்த அனுமதியில்லை. மொபைல் போன், கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது தவறாகும். ஒரு சில நாட்களில், பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில், இதுகுறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்படும்,’’ என்றார்.
சிபாரிசால் தவிப்பு: திருமணம் நடத்த வரும் பலர், புகைப்படம் எடுக்க, கட்சி பிரமுகர்களின் சிபாரிசை நாடுகின்றனர். அவர்களின் ஆதிக்கத்தால், கோவில் நிர்வாகிகள் செயல்பட முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.