மயிலாடுதுறை: வானகிரி கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வானகிரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மீனவர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் இக்கோவிலுக்கு நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவரை சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் ரேணுகாதேவி அம்மன் சன்னதிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியுடன் வழிபட்டார். கோவிலில் இருந்து வெளியே வந்த துர்கா ஸ்டாலினை இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த வீரவேல், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து மேல் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும். வீரவேல் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட துர்கா ஸ்டாலின் முதல்வரிடம் தெரிவித்து உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த மீனவப் பெண்களிடம் நலம் விசாரித்து, குறைகளை கேட்டு அறிந்தார். இந்நிகழ்வில் பூம்புகார் எம்எல்ஏ. நிவேதா எம் முருகன், சீர்காழி யூனியன் சேர்மன் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். சீர்காழி டிஎஸ்பி. லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.